Tuesday, 1 August 2017

புத்தம் சரணம் கச்சாமி : சாக்யா ஈ.அன்பன்

புத்தரின் வாழ்க்கையையும் அவருடைய போதனைகளையும் சுருக்கமாகக் கொண்டுள்ள நூல் திரு ஈ.அன்பன் அவர்கள் தொகுத்துள்ள "புத்தம் சரணம் கச்சாமி". 2005இல் நூலாசிரியர் அன்பளிப்பாக தந்த இந்நூலை மறுபடியும் அண்மையில் வாசித்தேன்.

புத்த தம்மத்தை அறிய விரும்பும் புதிய ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்குமாக இந்நூல் தொகுத்து வழங்கப்படுவதாகக் கூறுகின்றார் தொகுப்பாசிரியர். 11 அத்தியாயங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்நூல் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல துணைத் தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

 • புத்தரின் வாழ்க்கை 
 • முதல் பேருரை
 • நான்கு உன்னத வாய்மைகள்
 • எண் மார்க்கம்
 • புத்தரின் சமய பரப்புப்பணிகள்
 • புத்தரின் ஆளுமை
 • புத்தரின் அன்றாட செயல்பாடுகள்
 • புத்தரின் பரிநிப்பானம் (மறைவு)
 • திரிபீடகம்
 • கம்மா, நல்வினை, தீவினை
 • மனித ஆளுமையின் பகுப்பாய்வு
 • பவுத்த வாழ்முறை
 • சமூகப் போதனைகள்
 • பவுத்தம் போற்றிய தமிழர்கள் 

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சில பயிற்சிக் கேள்விகளும், சிறு குறிப்பு வரைக என்று சில கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. படித்ததை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளவும் தம்மை சோதித்துக் கொள்வதற்கும் வாசகர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இக்கேள்விகள் துணை நிற்கின்றன. இந்நூலில் குறிப்பிடத்தக்கனவாக சிலவற்றைக் காண்போம்.

புத்தர் பிறந்த இடம் லும்பினி
புத்தர் மெய்ஞ்ஞானம் பெற்ற இடம் கயா
புத்தர் முதல் தம்ம பேருரையாற்றிய இடம் சாரநாத்
புத்தர் பரிநிப்பானமடைந்தது குசினரா
மேற்கண்ட அனைத்துமே பௌர்ணமி நாளில் நிகழ்ந்தபடியால் பௌத்த நாடுகளில் பௌர்ணமி நாள் புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது. (ப.84)

ஒரு முறை புத்தர் தம் சீடர்களுடன் ஜேதவனத்தில் தங்கியிருந்தபேது கையில் சிறிது உதிர்ந்த இலைகளை எடுத்துக் கொண்டு கூறினார். "பிக்குகளே, நான் உங்களுக்கு போதித்தது என் கையில் உள்ள இலைகளின் அளவே, ஆயின் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இந்த வனத்தில் உள்ள இலைகளின் அளவிலும் அதிகமானது." (ப.93)

திரிபீடகம் இன்றைக்கு மிகப் பெரிய ஆழமான நன்னெறி கோட்பாடுடைய புத்தரின் போதனைகளாகும். திரிபீடகம் என்ற சொல்லுக்குக்கு மூன்று கூடைகள் என்று பொருளாகும். அவை சுத்த பீடகம் (பேருரைப்பகுதி), அபிதம்ம பீடகம் (உன்னத கோட்பாட்டுப் பகுதி) மற்றும் விநய பீடகம் (நன்னடதைக் கோட்பாட்டுப் பகுதி) என்பனவாகும். ஒவ்வொரு பகுதியும் பல உட்பிரிவுகளைக் கொண்டு 31 நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. (ப.87)

இளம்போதியார் (கி.பி.2ஆம் நூற்றாண்டு), சீத்தலைச்சாத்தனார் (கி.பி.2), அறவணடிகள் (கி.பி.2), மணிமேகலை  (கி.பி. 2), நாகுத்தனர் (கி.பி.4), புத்ததத்தர் (கி.பி.5), புத்தகோஷர் (கி.பி.5), தம்மபாலர் (கி.பி.5), தினகர் (கி.பி.5), போதிதம்மர் (கி.பி.6), தம்மபாலர் (கி.பி.7), தம்மகீர்த்தி (கி.பி.7), வஜ்ரபோதி (கி.பி.7), போதிசேனர் (கி.பி.7), புத்தமித்திரர் (கி.பி.10), அனுருத்தர் (கி.பி.12), திஸ்பனகரா புத்தபியாதேரர் (கி.பி.12), கஸப்பதேரர் (கி.பி.12), தம்மகீர்த்தி தேரர் (கி.பி.12) ஆகியோர் பௌத்தம் போற்றிய தமிழர்கள் ஆவர். (ப.184)

புத்தரின் வரலாற்றை சுருக்கமாக அறிந்துகொள்ளவும், பௌத்தக் கொள்கைகளை நுணுக்கமாக அறிந்துகொள்ளவும் உதவும் இந்நூலை வாசிப்போம்.

நூல் : புத்தம் சரணம் கச்சாமி
ஆசிரியர் : திரு சாக்யா ஈ.அன்பன் (அன்புமலர்)
வெளியீட்டாளர் : புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை, சென்னை கிளை, 89, மூன்றாவது தெரு, மல்லீஸ்வரி நகர், சேலையூர், சென்னை 600 073
பதிப்பு : ஏப்ரல் 2005
விலை ரூ.75      

Saturday, 1 July 2017

நாளிதழ் செய்தி : குடவாசல் புத்தர் : ஏப்ரல் 2002

கடந்த பதிவுகளில் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றி வெளியான நாளிதழ்களில்  வெளியான செய்திகளைப் பார்த்தோம். அவ்வகையில் இதுவரை மங்கலம் (சூன் 1999), அய்யம்பேட்டை (நாகப்பட்டின செப்புத்திருமேனி) (நவம்பர் 1999), புதூர் (அக்டோபர் 2000),  கோபிநாதப்பெருமாள்கோயில் (பிப்ரவரி 2002), ஆகிய சிலைகளைப் பற்றி விவாதித்துள்ளோம். இப்போது, திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சீதக்கமங்கலத்தில் இருந்த புத்தர் சிலையைப் பற்றி வெளியான செய்திகளைக் காண்போம்.

இந்த புத்தர் தலையைப் பற்றிய கண்டுபிடிப்பு சற்றே வித்தியாசமானது. தமிழ்ப்பல்கலைக்கழகத் தத்துவ மையத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர் திரு கோவிந்தராஜன் என்னிடம் கேட்டு, இது புத்தரின் தலை என்று என்னால் அவரிடம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. அந்த அனுபவத்தைப் பிறிதொரு பதிவில் காண்போம். 


திருவாரூர் மாவட்டத்தில் புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிப்பு, தினமணி, 18.4.2002
குடவாசல் அருகே புத்தர் சிலையின் தலை கண்டெடுப்பு, தினமலர், 18.4.2002
குடவாசல் அருகே புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுப்பு, தினத்தந்தி, 19.4.2002


1993 முதல் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.
கண்டுபிடிப்புகள் (நாளிதழ்) நறுக்குகள்

The newspaper clippings pertaining to the Head of Buddha statue, found in Kudavasal by Mr Govindarajan, and identified by me during April 2002

Thursday, 1 June 2017

தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் : பிக்கு மௌரியார் புத்தா

அண்மையில் நான் படித்த நூல் மதிப்பிற்பிற்குரிய பிக்கு மௌரியா புத்தர் அவர்களால் தொகுக்கப்பட்ட தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள். பௌத்தக் களப்பணி தொடர்பாக தமிழில் குறிப்பிடத்தக்க நூலாக அமைந்துள்ள இந்நூலை 27 மே 2017 அன்று பிக்கு அவர்கள் நேரில் என் இல்லத்திற்கு வந்து, தந்து என் ஆய்வு பற்றி விசாரித்தார். அவருக்கு நன்றி. 

"தொல்லியல் ஆய்வாளர் கன்னிங்காம்தான் முதன்முதலில் தொல்லியல் ஆய்வுகளில் பௌத்த அடையாளங்களையும் கற்றூண்களையும் மண்ணிலிருந்து வெளிக்கொண்டு வந்தவர்...அவர் செய்த அகழாய்வுகள் பௌத்த நெறியைச் சார்ந்ததாக இருந்தது...அதன் பிறகு பௌத்த அகழாய்வு ஆசிரியர்கள் நமக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை." என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கூறுகிறார் தொகுப்பாசிரியர் வணக்கத்திற்குரிய பிக்கு மௌரியா புத்தா. 
இந்நூலில் புத்துயிர் பெறும் பௌத்தம், வேரூன்றி படர்ந்து வளர்த்த பௌத்தம் (பிக்கு மௌரியார் புத்தா), பௌத்தரின் குகைகள், கற்றூண் சிற்பங்கள், புனித தலங்களின் அழிப்பும் பௌத்தர்களின் பாராமுகமும், அலட்சியமும் (தமிழாக்கம் தொல்லியன்), தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் (இளம்போதி),களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகள் (பா.ஜம்புலிங்கம்), புத்தர்களைக் காப்போம் (ம.செல்வபாண்டியன்), பௌத்த தமிழ்நாடு (அன்பு பொன்னோவியம்),Cultural Archaeology of Buddhism in Kerala (Ajay S Sekher) என்ற தலைப்பிலான கட்டுரைகள் அமைந்துள்ளன.

புத்துயிர் பெறும் பௌத்தம் என்ற கட்டுரையில் புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் பௌத்த நெறிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

வேரூன்றி படர்ந்து வளர்ந்த பௌத்தம் கட்டுரையில் அசோகர் காலம் தொடங்கி தமிழகத்தில் பௌத்தம் தழைத்தோங்கிய நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், உத்திரமேரூர், உத்திரமேரூர், மதுரை என்கிற மருதை, மாங்குடி, மாங்குளம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பட்டுக்கோட்டை, ஜெயங்கொண்டம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், தியாகனூர், பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் பௌத்தம் இருந்ததற்கான சான்றுகளைப் பற்றியும், ஆனைமங்கலச் செப்பேடு, வேள்விக்குடி செப்பேடு, பட்டிபெரலு கல்வெட்டு, அழகன்குளம் பானை ஓட்டுக் கீறல்கள், சுடுமண் சிற்பங்களைப் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

பௌத்தரின் குகைகள், கற்றூண் சிற்பங்கள், புனித தலங்களின் அழிப்பும் பௌத்தர்களின் பாராமுகமும், அலட்சியமும் என்ற கட்டுரையில் ஒவ்வொரு பௌத்தரும் தமக்கு மிக அருகாமையில் உள்ள பௌத்த கற்றூண் சிற்பங்கள், குகைகள் மற்றும் பண்டைய கால எஞ்சியுள்ள புனிதத் தலங்களுக்கு ஒவ்வொரு முழு நிலவு (பூர்ணிமா) நாளில் சென்று வணங்க வேண்டும் என்ற அறவுரையுடன் தொடங்கி உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணிகளைக் குறித்த கருத்துகளும் பணிக்கான செயல்பாடு,இலக்கு, தீர்வு ஆகியவையும் உரிய மாதிரிகளோடு முன் வைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் என்ற கட்டுரையில் தமிழகமே பௌத்த தளமாகயிருந்தது என்ற கருத்து முதன்மையாக வைக்கப்பட்டு, காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் பௌத்தத்தின் தாக்கம் வேரூன்றி இருந்ததைக் குறித்து எடுத்துரைக்கிறது.

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்ற கட்டுரையில் 1993 முதல் தமிழகத்தில் ஒருங்கிணைந்த திருச்சி, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 16 புத்தர் மற்றும் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றி ஆராய்கிறது.

புத்தர்களைக் காப்போம் என்ற கட்டுரையில் புத்தர் சிலைகள் இருக்கும் இடங்கள், சிலைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பிற இடங்களில் காணப்படுகின்ற புத்தர் சிற்பங்களைக் காத்திட நீண்ட காலத்திலும், உடனடியாகவும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் மற்றும் செயல் திட்டங்களைக் குறித்து  நுட்பமாக எடுத்துரைக்கிறது.

பௌத்த தமிழ்நாடு என்ற தலைப்பிலான கட்டுரையில் இந்தியா பௌத்த தேசமாக ஆவதற்கு முன்பே தமிழ்நாடு பௌத்தத்தின் இருப்பிடமாக ஆகிவிட்டது என்பதில் தொடங்கி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பௌத்தம் செழித்திருந்தது பற்றியும் தமிழ்நாட்டில் 60க்கும் மேற்பட்ட இடங்கள் பௌத்த மையங்களாக இருந்தமை குறித்தும்  நுணுகி ஆராயப்பட்டுள்ளது.

Cultural Archaeology of Buddhism in Kerala  என்ற கட்டுரையில் கேரளாவில் மறைந்துபோன பௌத்தம் சார்ந்த வரலாறு, தொல்லியல் ஆதாரங்களை மொழியியல், பண்பாடு, மற்றும் தொல்லியல் நோக்கில் ஆராயும் முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வினை அடிப்படையாகவும் முன்னிலைப்படுத்தியும் வெளிவருகின்ற நூல்கள் அருகியுள்ள இக்காலகட்டத்தில் பௌத்தத்திற்கு இந்நூலானது மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றது. பெரும்பாலான கட்டுரைகளில் களப்பணி அடிப்படையிலான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னிந்திய பௌத்தத்திற்கும், குறிப்பாக தமிழக பௌத்தத்திற்கும் களப்பணி அடிப்படையில் அமைந்த ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது. பௌத்த ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் மட்டுமன்றி வரலாற்றறிஞர்களுக்கும் பௌத்தம் தொடர்பான அண்மைப் பார்வையினை அளிக்கின்ற இந்நூலை வாங்குவோம், வாசிப்போம், பாதுகாப்போம்.  


நூல் : தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் 
பொருண்மை : கட்டுரைத் தொகுப்பு 
ஆசிரியர் : பிக்கு மௌரியார் புத்தா
வெளியிடுபவர் : புத்தர் வழி, பிரக்போதி புத்த விகார், போதி வனம், சாந்திபுரம், ஓரிக்கோட்டை அஞ்சல், இராமநாதபுரம்  623 402

விலை : ரூ.100
தொலைபேசி : 9943087674/8012985125
மின்னஞ்சல் : buddhamouriyar@gmail.com/buddhavazhi@gmail.com


புத்தர் வழி என்னும் இரு மாத இதழுக்கும் மேற்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 

Monday, 1 May 2017

நாளிதழ் செய்தி : கோபிநாதப்பெருமாள்கோயில் புத்தர் : பிப்ரவரி 2002

28 ஏப்ரல் 2017 அன்று நடைபெற்ற பணிநிறைவு வாழ்த்தியல் விழாவில்,
என் மனைவி பாக்கியவதி எழுதிய நூலை
பல்கலைக்கழகத்துணைவேந்தர் பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்கள் வெளியிட
வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பெறுகிறார். அருகே பதிவாளரும், நிதியலுவலரும் உள்ளனர்.
உதவிப்பதிவாளர் பதவி உயர்வு பெற்ற செய்தியைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

விழாவிற்கு வருகை தந்தோருக்கும், வாழ்த்து தெரிவித்தோருக்கும் நன்றி.
விழாவின்போது வழங்கப்பட்ட நினைவுப்பரிசு
கடந்த இரு பதிவுகளாக ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றி வெளியான நாளிதழ்கள் செய்திகளைப் பற்றி விவாதித்து வருகிறோம். அவ்வகையில் இந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைக் காண்போம்.

ஆய்வின்போது 2002இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் பட்டீஸ்வரம் அருகே கோபிநாதப்பெருமாள் கோயில் என்னுமிடத்தருகே கண்டுபிடிக்கப்பட்டதாகும். பிறகு சில களப்பணிகளுக்குப் பிறகு அங்கு சென்றபோது அவ்விடத்தில் காணப்படவில்லை என்பது வேதனையே. இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தார் சிலையருகே என்னை பேட்டி காண்பது போல எடுத்த பதிவு மறக்க முடியாத அனுபவமாகும்.

1993 முதல் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.
கண்டுபிடிப்புகள் (நாளிதழ்) நறுக்குகள்உலகப்புத்தகத் திருவிழா நாளில் (23 ஏப்ரல் 2017)
தஞ்சாவூர் தி இந்து அலுவலகத்தில் வாசகர்களுடன் கலந்துரையாடல்

Saturday, 1 April 2017

நாளிதழ் செய்தி : புதூர் புத்தர் : அக்டோபர் 2000

ஆய்வின்போது 2000இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் புதூர் என்னுமிடத்தில் வழிபாட்டில் உள்ளதாகும். இந்த சிலையைப் பார்க்க சுமார் 25 கிமீ மிதிவண்டியில் நான் சென்றது மறக்கமுடியாதது. 

இச் செய்தி தூர்தர்ஷன் தொலைகாட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் வெளியானதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.  அப்போது வீட்டில் இணைய வசதி வீடுகளுக்கு பரவலாக கிடைக்காத நிலையில், இச்செய்தி தொடர்பான நறுக்கை இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகக் காப்பாளர் ஜான் கய் அவர்களுக்கு அனுப்புவதற்காக இணைய மையத்திற்குச் சென்றேன். அங்கிருந்த பணியாளர் எனக்காக ஒரு மின்னஞ்சலை உருவாக்கித் தந்து அதனை அவருக்கு அனுப்பினார். அனுப்பும்போது அந்த சிலையைப் பற்றிய செய்தியை சென்னைத் தொலைக்காட்சியில் தான் பார்த்ததாகவும், தஞ்சையிலுள்ள சென்னைத் தொலைக்காட்சி நிருபர் தன்னுடைய தந்தை என்றும் அவர் கூறினார். பின்னர் அவரைக் கண்டு சந்தித்து, அவருக்கு நன்றி கூறினேன்.

இந்த புத்தரைக் கண்டுபிடிக்கச் சென்ற அனுபவத்தை பௌத்த சுவட்டைத் தேடி : புதூர் என்ற தலைப்பில் முன்னரே படித்துள்ளோம். அந்த புத்தர் சிலை தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் காண்போம்.  வெளியிட்ட அனைத்து இதழ்களுக்கும் என் ஆய்விற்குத் துணை நிற்கும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவாரூர் அருகே புத்தர் வழிபாடு, தினமணி, 31.10.2000
திருவாரூர் அருகே சோழர் கால புத்தர் சிலை கண்டெடுப்பு,
தினமலர், 31.10.2000
திருவாரூர் அருகே வித்தியாசமான 5 அடி உயர புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினபூமி, 1.11.2000

திருவாரூர் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு-
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல், தினத்தந்தி, 1.11.2000


திருவாரூர் அருகே புதூர் கிராமத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு-திருநீறு பூசி மக்கள் வழிபாடு, தமிழ் முரசு, 2.11.2000


Fresh evidence of Buddhist hold over Chola ethos,
The New Indian Express, 3.11.2000
திருவாரூர் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு,
தினகரன், 6.11.2000


As seen in the South, The Hindu, 24.11.2000

பண்டைய சோழ நாட்டில் புத்தமத வழிபாடு,  மாலைச்சுடர், 30.11.2000
நன்றி
25 கிமீ என்னுடன் மிதிவண்டியில் துணைக்கு வந்து புத்தரைக் கண்டுபிடிக்க உதவிய மழவராயநல்லூர் சித்தார்த்தா சமூகக் கல்விக்கழகத்தைச் சேர்ந்த திரு சிங்காரவேலன், திரு விசுவநாதன், திரு சிவகுருநாதன் மற்றும் புதூர் கிராம மக்கள், மற்றும் மேற்கண்ட நாளிதழ்கள்

1993 முதல் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.

Wednesday, 1 March 2017

நாளிதழ் செய்தி : நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி : அய்யம்பேட்டை : நவம்பர் 1999

சோழ நாட்டில் பௌத்தம் என்ற முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டபோது களப்பணியின்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த புத்த செப்புத்திருமேனி ஒன்றையாவது கண்டுபிடிக்கவேண்டும் என் என்ற அவாவினைப் பூர்த்தி செய்தவர் வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்கள். அவ்வாறான முயற்சியை 1993இல் நான் தொடங்கியபோதும் அவ்வாறான ஒரு புத்தர் செப்புத்திருமேனியை 1999இல் காணமுடிந்தது. என் கண்டுபிடிப்பு பற்றிய இரண்டாவது நாளிதழ் செய்தியாகும். (முதல் செய்தி மீசை புத்தர் பற்றியது)

நாகப்பட்டினத்தில் கி.பி.1856இலிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்நாட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அய்யம்பேட்டையில் தனியாரிடம் வழிபாட்டில் உள்ள அத்திருமேனியை முனீஸ்வரர் என்று வழிபட்டுவருகின்றனர். கொல்கத்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலிருந்து பெறப்பட்ட புத்தர் புகைப்படங்களில் ஒன்றினை ஒத்த கலையமைதியோடு இந்த புத்தர் செப்புத்திருமேனி உள்ளது. 


அத்திருமேனியைப் பற்றி அவர் தந்த செய்தி இதழ்களில் வெளிவந்தது. அவற்றில் இந்த புத்தரைப் பற்றி விவரமாகக் கூறியுள்ள அவர், "சோழ தேசத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ள தத்துவத்துறை ஜம்புலிங்கம் தொகுத்துள்ள நாகையில் இருந்து கிடைத்த புத்தரின் திருமேனி புகைப்படத் தொகுப்பு ஒப்பாய்வும் மேற்கூறிய தகவல்களை உறுதி செய்கிறது" என்று ஆய்வினை மேற்கோள் காட்டியுள்ளார்.  
தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே இவ்வாறான நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் உள்ளன. சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்தில் ஒரு செப்புத்திருமேனி உள்ளது. அதற்கு அடுத்தாற்போல இவ்வகை செப்புத்திருமேனி உள்ள இடம் என்ற பெருமையை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பெறுகிறது. இத்திருமேனியைப் பார்க்கச் சென்றதும், நாளிதழ்களில் செய்தி வந்ததும் மறக்க முடியாத அனுபவமாகும். 

1993 முதல் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.
கண்டுபிடிப்புகள் (நாளிதழ்) நறுக்குகள்

நன்றி : திரு அய்யம்பேட்டை செல்வராஜ்

Wednesday, 1 February 2017

தமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை

சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ, 
முனைவர் பட்ட ஆய்வு, களப்பணி, எழுத்து 
உள்ளிட்டவற்றை மேற்கோளாகக் கொண்டு
புதிய தலைமுறை இதழில் வெளியான தமிழகத்தில் புத்தர் இருக்கிறார் என்ற தலைப்பிலான கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 
வெளியிட்ட புதிய தலைமுறை இதழுக்கும், கட்டுரையாளர் திரு சு. வீரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பெரண்டாக்கோட்டை என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சாம்பான் என்ற கடவுளுக்கு வழிபாடு நடத்திவருகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நாம் அந்த கிராமத்திற்குச் சென்று சாம்பான் வழிபாடு நடைபெறும் இடத்தில்  உள்ள சிலையைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் சாம்பான் என்று சொல்லி வழிபடும் சிலை புத்தரின் சிலை.

இந்த குக்கிராமத்தின் உள்ளே புதர்கள் மண்டிய அடர்ந்த காடு போன்ற திடலில் மார்பு மற்றும் கழுத்துப்பகுதிகள் உள்ளே புதைந்துள்ள நிலையில் தலையை மட்டும் வெளியே காட்டி மெல்லிய புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார் புத்தர். இந்த புத்தர் சிலை சாம்பான் என்ற பெயரில் காலம்காலமாக இங்குள்ள ஒரு சமூகத்தால் வணங்கப்படுகிறது.

இந்த புத்தரை சாம்பானாக வணங்கும் மக்கள் "எங்களுக்கு விவரம் தெரிஞ்ச காலத்திலிருந்து இந்த சிலையை சாம்பான் சாமின்னுதான் கும்பிட்டு வருகிறோம். இந்த சாமிக்கு சிவன் ராத்திரி அன்னைக்குதான் விசேஷம். அன்னைக்கு இரவு இந்த சிலைக்கு பூசை செய்து வழிபாடு செய்வோம். அதுபோக, வருடத்திற்கு ஒருநாள் கிடா வெட்டியும் வழிபாடு செய்வோம். இங்கு ஆண்கள் மட்டும்தான் சாமி கும்பிட வருவோம் பெண்கள் வந்து சாமி கும்பிட மாட்டார்கள். இப்பதான் சில பேர் வந்து இது சாம்பான் சாமி இல்ல, புத்தர் அப்படி இப்படின்னு சொல்றாங்க. ஆனால், நாங்க இதை இன்னைக்கு வரைக்கும் எங்க ஊரை காப்பாத்துற சாம்பானாத்தான் கும்பிடுகிறோம்" என்கிறார்கள்.

இப்படி புத்த சமண எச்சங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றது. பௌத்த சமண சமயங்கள் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிலை பெற்றிருந்தன. இப்போது சில ஆயிரம் பேர் மட்டுமே பின்பற்றும் நிலையில் அவை இருந்தாலும் அப்போது பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் சமயங்களாக அவை இருந்தன.

தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக சோழ நாட்டில் அதிக அளவில் புத்த, சமண சமய தாக்கம் அதிகம் இருந்தது. புத்த, மகாவீரரின் சிலைகள் இன்றும் சோழ நாட்டில் அதிகம் கிடைக்கிறது. அந்த சமயத்தின் பெயர் தாங்கிய ஊர்கள் சோழ மண்டலத்தில் அதிக அளவில் உள்ளன. சாம்பன், அய்யனார் என்று பல பெயர்களைக் கொண்டு இன்றும் பல கிராமங்களில் கிடா வெட்டி பூஜை செய்து ஜீவகாருண்யத்தைப் பின்பற்றிய புத்த, மகாவீரர் சிலைகளை வழிபட்டு வருகிறார்கள்.

சோழ நாடு முழுமையும் உள்ள புத்த, சமண சான்றுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம். இந்த சான்றுளைப் பற்றி தனது வலைப்பூவில் தொடர்ச்சியாக எழுதி கவனம் பெறுகிறார். மேலும் 'சோழ நாட்டில் பௌத்தம்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவருமான முனைவர் பா.ஜம்புலிங்கம் விவாதிக்கிறார்.....
ஆய்வு தொடர்பான பிற பிற பேட்டிகள்
1)தினமணி 6.1.2008 (முதல் பேட்டி) :
2)டைம்ஸ் ஆப் இந்தியா, 29.10.2012 : 
3)ராணி, 3.5.2015 : 
4)தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,15.5.2015 :
Tracing footprints of Buddhism in Chola Country

எனது முகநூல் பக்கத்தில் அதிக நண்பர்கள் பகிர்ந்த பதிவு (30 shares)