சமண சுவட்டைத் தேடி: திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்

எனது முனைவர் பட்ட ஆய்விற்காக சோழ நாட்டைச் சார்ந்த புத்தர் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க பிப்ரவரி 1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன்.  எனது கட்டுரைகளில் அத்தொகுப்பு பற்றி குறிப்பிட்டு வருகிறேன். அந்நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சமணர் சிற்பங்களைப் பார்க்க விரும்பி முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டனர்.  எனது ஆய்வு பௌத்தம் தொடர்பானதாக இருப்பினும், எனது வலைப்பூவில் களப்பணியில் கண்ட சமணர் சிற்பங்களைப் பற்றி ஓர் இடுகை இட்டிருந்தேன். அதனடிப்படையில் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டபோது அத்திட்டத்திற்கு உதவ இசைந்தேன். எனது மேற்பார்வையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்ற திட்டத்தை மேற்கொள்ளும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களை அழைத்தபோது அவரும் மனமுவந்து எங்களுடன் இணைந்துகொண்டார். 3.11.2011 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் களப்பணி மேற்கொண்டோம். அப்போது ஒரு புதிய சமணர் சிற்பத்தைக் கண்டுபிடித்தோம். அதனைப் பத்திரிக்கைகள் மூலமாக வெளிவுலகிற்குக் கொணர்ந்தோம். அக்களப்பணியைப் பற்றிய பதிவே இம்மாத இடுகையாகும். 

1.செங்கங்காடு: புத்தர் சிற்பங்களைத் தேடி அலைந்தபோது தில்லைவளாகம் தெற்குப்பகுதியில் வேம்பழகன்காடு (செங்கங்காடு) என்னுமிடத்தில் 1999இல் நான் பார்த்த சமணர் சிற்பத்தை தற்போது பார்த்தோம். இச்சிற்பத்தைப் பற்றி எனது முனைவர் பட்ட ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளேன். 

சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள நூலில்  (செங்கங்காடு என்பதானது Senkadu என்றுள்ளது) இக்கண்டுபிடிப்பு பற்றிய பதிவு உள்ளது.  


"Dr B.Jambulingam, a research scholar of Thanjavur Tamil University in his survey for Buddhist antiquities in Thanjavur region came across a few Jain sculptures scattered in different desolate spots. He has identified four seated Tirthankara stone sculptures at places like Kariyankudi near Taplampuliyur in Tiruvarur Taluk, Tiruvarur District (Sl.No.30), Kottaimedu near Alangudipatti of Pudukottai district (Sl.No.31), on the back side of the Moola Anumar temple in Thanjavur (Sl.No.32) and in Senkadu of Tiruthuraipooondi Taluk of erstwhile Thanjavur district........."

முன்பு நான் வந்ததை நினைவுகூர்ந்தார் அங்கிருந்த திரு வி.என்.கோவிந்தசாமி வைத்தியர். அப்போது இச்சிற்பத்தைப் புகைப்படம் எடுத்தபோது அருகிலிருந்த சிலர் நான் புகைப்படம் எடுத்ததைக் கண்டித்து புகைப்படக் கருவியை என்னிடமிருந்து பறித்து வாக்குவாதம் செய்ததும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று நான் அங்கிருந்து திரும்பியதும் எனக்கு நினைவிற்கு வந்தது. கடந்த முறை நடந்ததைப் பற்றி  நான் எதுவும் பேசவில்லை. வாஞ்சையுடன் உதவினார் வைத்தியர்.  சிற்பத்தைப் புகைப்படம் எடுத்தோம். அருகில் மற்றொரு சிற்பம்  இருப்பதாக அவர் கூறினார். தகவலுக்கு  நன்றி கூறிவிட்டுக் கிளம்பினோம்.
 
2.ஜாம்பவானோடை: சுமார் 1 கிமீ கால்நடையாகச் செல்லவேண்டியிருந்தது. முன்பு பெய்திருந்த மழையின் காரணமாக நடப்பதே சிரமமாக இருந்தது. ஒரே சேறு. ஒரு காலை ஊன்றிவிட்டு மறுகாலை எடுப்பதற்குள் அடுத்த கால் உள்ளே பதிந்துவிட, நடக்க மிகவும் சிரமப்பட்டு உரிய இடத்தைச் சென்றடைந்தோம். அங்கு இரு தேவியருடன் இருந்த அய்யனார் சிற்பம் இருந்தது. அங்கிருந்து கிளம்பினோம். அப்போது அங்கிருந்தோர் தோலி என்னும் இடத்தில் ஒரு சிற்பம் இருப்பதாகக் கூறினர். சிற்பத்தைத் தேடிக்கொண்டே பயணித்தோம்.

3.தோலி: திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலையில் சங்கேந்தி அருகேயுள்ள தோலிக்கு வந்து சேர்ந்தோம். எங்களது முந்தைய களப்பணியில் பார்க்காத புதிய சமணர் சிற்பத்தைக் கண்டபோது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. 

அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் மிகவும் அழகாக அச்சிற்பம் இருந்தது. உரிய குறிப்புகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். இச்சிற்பம் தொடர்பான செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிட்டோம்.     

4.பஞ்சநதிக்குளம்: பஞ்சநதிக்குளம் செல்லும்முன் அங்குள்ள சிற்பம் பற்றிய பின்னணியைப் பார்ப்போம். கடந்த ஆண்டு தினமணி இதழில் வேதாரண்யம் பகுதியில் கவனம் பெறாமல் கிடக்கும் பழைமையான பொருள்கள் குறித்து படங்களுடன் வெளிவந்த செய்தியில், தொன்மையான பொருள்களை ஆய்வு மேற்கொண்டு வரலாற்றுப் பதிவுகளை அறிய வலியுறுத்தப்பட்டிருந்தது (17.8.2010). அச்செய்தியில் முள்ளியாற்றில் துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தலையில்லா சிற்பத்தின் புகைப்படமும், ஒரு கல்வெட்டின் புகைப்படமும் இருந்தன. தலையில்லாத  சிற்பம் புத்தராக இருக்குமோ என்ற ஐயம் எனக்கு எழுந்தது. உடன் தினமணி நிருபர் திரு கே.பி.அம்பிகாபதி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.  சமணராக இருப்பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்னும் திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களையும் அழைத்துக்கொண்டேன். இருவரும் 19.8.2010 அன்று அப்பகுதிக்குச் சென்றோம். எங்களின் கள ஆய்வில் திரு அம்பிகாபதி மிகவும் துணையாக இருந்தார். சிற்பம் இருந்த இடத்திற்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார். துணிதுவைக்கப் பயன்படுததப்பட்டு வந்த கல்லைப் புரட்டிப் பார்த்தபோது அது சமணர் சிற்பம் என்பது உறுதியானது. களப்பணியின்போது அருகில் எப்பகுதியிலும் தலைப்பகுதி காணப்படவில்லை.

19.8.2010 களப்பணி

 




தொடர்ந்து, தலையில்லாமல் இருந்த அந்த சமணர் சிற்பத்தைப் பற்றிய  செய்தி வெளியானது (தினமணி, 21.8.2010). அதன் தலைப்பகுதியைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும், இப்பணியில் தமிழ்ப்பல்கலைக் கழகக் கல்வெட்டுத்துறை ஆய்வாளர் திரு மன்னை.பி.பிரகாஷ் ஈடுபட்டிருந்ததாகவும், தலையில்லா சிற்பம் இருந்த இடத்திலிருந்து கிழக்கே சுமார் 1500 மீட்டர் தொலைவில் உள்ள முத்துவீரன்குளத்திலிருந்து தலைப் பாகம் கண்டெடுக்கப்பட்டதாகவும் படத்துடன் செய்தி வெளியானது (1.11.2011). இப்பின்னணியில் தற்போதைய களப்பணியின்போதும் திரு அம்பிகாபதி அவர்களைத் துணைக்கு அழைத்தோம். எமது வேண்டுகோளை ஏற்று அவர் வந்தார். அச்சிற்பத்தைச் சென்று பார்த்தோம். முதன்முதலாகப் பார்த்தபோது கிட்டத்தட்ட கழிவு நீரைப்போல தேங்கிய நீரில் மிக மோசமாகக் கேட்பாரற்றுக் கிடந்த அச்சிற்பம் தற்போது மேலசேத்தியில் ஒரு மரத்தின் அடியில் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டோம். மனதிற்கு ஒரு நிறைவு ஏற்பட்டது. 

3.11.2011 களப்பணி


அதனை புகைப்படம் எடுத்தோம். களத்தில் உதவிய அவருக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். காலைப்பயணத்தில் இதுவரை மழை இல்லாமல் இருந்தது. நாகப்பட்டினத்தை நெருங்க நெருங்க மழை தூற ஆரம்பித்தது.   

5.நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் பகுதிக் களப்பணியில் எங்களுடன் மழையும் சேர்ந்துகொண்டது. அப்பகுதியில் சமணர் சிற்பங்கள் இருப்பதாக நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழு உறுப்பினர் திரு க.இராமச்சந்திரன் கூறியிருந்ததன் அடிப்படையில் அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் கண்டுபிடித்த மூன்று சிற்பங்களைக் காண்பிக்க  அவர் எங்களுடன் சேர்ந்து கொண்டார். முதலில் வெளிப்பாளையம் பகுதியில் ஒரு மில்லில் சமணர் சிற்பம் இருப்பதை அழைத்துச்சென்று காட்டினார். அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள அச்சிற்பத்திற்கு மகாவீரர் ஜெயந்தி அன்றும் பிற விழா நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதாக அங்கிருந்த திரு சீதாராமன் தெரிவித்தார். அவர் அச்சிற்பத்தைப் போற்றும் விதம் பாராட்டும் வகையில் இருந்தது. வாழ்த்து தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம்.  

6.சிராங்குடி புலியூர்: அடுத்ததாக அவர் எங்களை நாகூர் ஆழியூர் சாலையிலுள்ள சிராங்குடி புலியூர் அழைத்துச்சென்றார். அங்கு ஒரு சிறிய சமணர் சிற்பம் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. அவ்வப்போது அருகிலுள்ளோர் பூசை செய்வதை அறியமுடிந்தது.

7.பள்ளியன்தோப்பு:  அவர் எங்களை அழைத்துச்சென்ற மூன்றாவது இடம் பள்ளியன்தோப்பு. ஏப்ரல் 2010இல் சிக்கல் அருகே ஒரு புத்தர் சிற்பத்தின் இடுப்புப்பகுதிக் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார் (The Hindu, 23.4.2010). அதற்கு முன்னர் ஒரு முறை அப்புகைப்படத்தைக் காண்பித்து அது புத்தரா என்று அவர் கேட்க, அது புத்தர் அல்ல என்று கூறியிருந்தேன். இக்களப்பணியின்போது அச்சிற்பத்தைப் பார்க்கும் ஆவலைக் கூறவே, அவர் எங்களை அங்கும் அழைத்துச்சென்றார். மிதமாக இருந்த மழை வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. மகிழ்வுந்தை விட்டு இறங்க இயலா நிலை. அவ்வளவு மழை. அருகில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எங்களது பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, நான்கைந்து குடைகளை வாங்கிவந்துவிட்டார் இராமச்சந்திரன். பல இடங்களில் புகைப்படம் எடுக்கும் முன் தெளிவிற்காக தண்ணீரைத் தெளித்து புகைப்படம் எடுத்தோம். இங்கு அந்நிலை ஏற்படவில்லை. அச்சிற்பம் மழையால் நனைந்திருந்தது. நேரில் பார்த்தபின் அது புத்தர் அல்ல என்பதை அவரிடம் உறுதியாகக் கூறினேன். இது பற்றி பிறிதொரு இடுகையில் விரிவாக விவாதிப்போம்.  இந்த மூன்று சிற்பங்களைப் பற்றிய செய்தியையும் வெளிக்கொணர்நத  அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம்.

8.வைப்பூர் :  கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது. இருட்டுவதற்குள் நேரத்தை வீணாக்காமல் அருகே வேறு ஏதாவது சமணர் சிற்பம் இருக்கிறதா என யோசிக்கும்போது தில்லை கோவிந்தராஜன் வைப்பூரில் சமண சிற்பம் உள்ளதாக குடவாயில் சுந்தரவேலு 2006இல் கூறியிருந்ததை நினைவுகூர்ந்தார் (தினத்தந்தி, 8.4.2006). அதன் அடிப்படையில்  நாகூர் திருவாரூர் சாலையில் கங்களாஞ்சேரி அருகே உள்ள வைப்பூர் சென்றோம். மழையும் தொடர்ந்தது. விசாரித்து சிற்பம் இருந்ததாக உள்ள இடத்திற்கு வந்துசேர்ந்தோம். பெருமாள் கோயிலில் இருந்த அச்சிற்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்தனர். அந்தச் சமணரை புத்தர் என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்ததைக் களப்பணியின்போது அறியமுடிந்தது. இருட்டு அதிகமாகக் கவ்வ ஆரம்பிக்கவே அங்கிருந்து கிளம்பினோம்.

இக்களப்பணியின்போது நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சில இடங்களில் சிற்பங்கள் பாதுகாப்பின்றி இருப்பதையும், சில இடங்களில் பாதுகாப்பாகப் போற்றப்படுவதையும் காணமுடிந்தது. எமது தேடலின்போது ஆங்காங்கு உள்ளவர்களிடம்  சிற்பங்களின் முக்கியத்துவத்தையும், அதன் அருமை பெருமைகளையும் கூறியபோது அவர்கள் ஆர்வமாகக் கேட்டவிதம் பாராட்டும் வகையில் இருந்தது. ஒரே நாளில் எட்டு சிற்பங்களைப் பார்த்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் களப்பணியை  முடித்துத் திரும்பினோம். மகிழ்வுந்தில் திரும்பிக் கொண்டிருக்கும்போது திரு முருகேசன் இப்பகுதியில் வேறு இடங்களில் சமணர் சிற்பங்கள் ஏதேனும் உள்ளனவா எனக் கேட்டபோது களப்பணியில் முன்னர் நான் பார்த்த வேறு சில சமணர் சிற்பங்களைப் பற்றிய நினைவு எனக்கு வந்தது. திரு தில்லை கோவிந்தராஜன் அவர் பார்த்த சமணர் சிற்பங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். மும்முரமாக அடுத்த களப்பணிக்கான திட்டமிடல் ஆரம்பமானது தஞ்சாவூர் வந்து சேர்வதற்குள். 

நன்றி: களத்தில் உதவியவர்களுக்கும், தோலியில் சமணர் சிற்பத்தைக்கண்டுபிடித்த செய்தியை வெளியிட்ட தினமணி, தினத்தந்தி, The Hindu, Deccan Chronicle உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளுக்கும் நன்றி.

  (4 ஜனவரி 2023இல் மேம்படுத்தப்பட்டது)

Comments